Wednesday, April 23, 2008

ச. சத்திவேல் ஐயா அவர்களுக்கு சமர்ப்பணம்

ச. சத்திவேல் ஐயா என்பவர் ஈழத்து படைப்பாளிகளில் ஒருவராவார். இவர் தமிழீழத் தாயகத்தின் தற்காலிகத் தலைநகரான கிளிநொச்சி பிரதேசத்தில் தன்னிகரில்லா ஒரு படைப்பாளியாக விளங்கியவர். தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை பதித்தவர். இவர் ஒரு எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், கலைஞர், நாடக இயக்குநர் என பன்முக ஆற்றல் கொண்டவர். நடிப்பாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே கைவரப் பெற்றவர். ஐயா அவர்களின் கலையுலக வாழ்க்கை என்பது கடவுள் அவருக்கு கொடுத்த கொடை என்றே சொல்லவேண்டும். கலை அவரது செங்குருதியில் ஊறிப்போயிருந்தது. எந்த ஒரு தலைப்பு என்றாலும், எதைப்பற்றி என்றாலும் அவரது கற்பனை வானில் கவிதை மழைத்துளிகள் கொட்டத் தொடங்கிவிடும். அதுவே நாடகம் என்றால் அவை அடுத்த நொடியில் வண்ண மேகங்களாய் காட்சியமைப்புகள் விரிந்த வான்வெளியில் வெள்ளோட்டம் ஓடத்தொடங்கிவிடும். சத்திவேல் ஐயாவின் நாடகம் என்றால் அரங்குகள் தானாக நிரம்பி வழியும். ஐயாவின் நாடகங்களில் நடிப்பதற்கு என்றாலே பாடசாலை மாணவச் செல்வங்கள் முதல் பல்வேறு மட்டத்தினர் மத்தியிலும் ஒரு போட்டி நிலவும்

இவர் தனது கலையுலகம் என்பதற்கு அப்பால் தமிழர் தாயகம், தமிழர் உரிமை போன்றவற்றின் அவசியத்தையும் காலத்தால் உணர்ந்தார். தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட இனவன்முறை நிகழ்வுகளும் உயிர்பலிகளும் அவரை தமிழீழப் பற்றாளர் ஆக்கியது. அத்துடன் தனது "தமிழொளி கலாமன்றம்" எனும் மன்றத்தினை  தமிழீழக் கலை பண்பாட்டு கழகத்துடன் இணைத்துக்கொண்டார். அதனூடாக தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, எமது சமூகம் முகம் கொடுக்கும் இன்னல்களை நாடகங்கள், கவிதைகள், எழுத்துக்கள் என புரட்சி வடிவில் மக்கள் முன் வைத்தார். அத்துடன் புலிகளின் குரல் வானோசை மன்றத்தின் ஆலோசகராகவும் தொடர்ந்து பணியாற்றினார். இந்த படைப்பாளி இன்று எம்முடன் இல்லை. ஆம்! அவர் தனது 66வது அகவையில் இயற்கையை எய்திவிட்டார். இந்த செய்தி எமக்கு ஆழ்ந்த கவலையைத் தந்துள்ளது. இவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை அவரது தமிழ் பற்றினையும், தமிழ் எழுத்துலக பணியினையும் கௌரவித்து, அவரது கலைப் பணியில் அவருடன் ஒருங்கிணைந்து பங்காற்றிய கலைஞர்களான நாங்கள், அன்னாரின் நினைவாக இந்த வலைத்தளத்தை உருவாக்கி சமர்ப்பணம் செய்கின்றோம்.

இவரது படைப்புகள் காலத்தால் போற்றத்தக்க பல அளப்பரிய ஆக்கங்களை கொண்டவை. இவர் எழுதிய நூல்கள் பல அச்சேறும் நிலையில், இன்னும் அச்சேறாமல் கிடக்கின்றன. இன்னும் எத்தனையோ சிறந்த நாடகக் கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என இவர் எழுதியவை ஏராளம். அவை அனைத்தும் நூலுருப் பெறவேண்டியவை. அதிகம் போராட்ட சூழ்நிலைகளை மையப்படுத்திய இவரது புரட்சிகர ஆக்கங்கள் வெளியுலகம் அதிகம் அறிந்திராத ஒன்று. இருப்பினும் எம்மால் முடிந்தவரை அவற்றையெல்லாம் சேகரித்து இத்தளத்தில் பதிவிடும் முயற்சியில் உள்ளோம்.

நாங்கள் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் கிளிநொச்சி வந்த போது தான் இவரது அறிமுகம் கிடைத்தது. கிளிநொச்சி பிரதேசத்தில் அனைத்து மட்டத்தினரதும் அன்புக்கு பாத்திரமான ஒருவராக இவர் திகழ்ந்தார். மிகவும் எளிய தோற்றமுடையவர். ஒரு எழுத்தாளர், கவிஞர், கலைஞர் எனும் எவ்விதப் பெருமிதமும் இன்றி எவருடனும் இயல்பாகப் பழகும் குணம் இறைவன் இவருக்கு இயற்கையாய் கொடுத்தது. இவரை எல்லோரும் "ஐயா" என்றே அன்புடன் அழைப்போம்.

தனது 66வது அகவையிலும் புன்னகை மாறாத முகத்துக்கு சொந்தகாரர். இன்னும் இவரது குணயியல்புகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

தமது வாழ் நாளில் எவரதும் மனதையும் புண்படுத்தியதில்லை, காணும் அனைவரிடம் அன்பாக பேசி மனங்களை வெல்லும் மகத்தான குணம் இவருக்குடையது; இவருக்கு மட்டுமே உடையது. ஐயாவின் படைப்பாற்றல்களை படியெடுத்தும், காட்சியமைப்புகளை மாற்றியமைத்தும் கலைப்பணி செய்த பலரை ஆங்காங்கே எம்மால் காணவும் முடிந்தது. அவற்றை பலமுறை ஐயாவிடம் முறையிட்டுள்ளோம். ஆனால் அவ்வாறு முறையிட்டப்போதும் ஐயா அதற்காக கவலைப்படுவதோ அலட்டிக்கொள்வதோ இல்லை மாறாக குறிப்பிட்ட நபர்களை (படைப்புத் திருடர்களை) நேரில் காணும் போது அவர்களையும் தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பதே ஐயாவின் குணம். ஐயா எத்தனை நல்லுள்ளம் பெற்ற ஒரு மனிதராகவே வாழ்ந்துள்ளார் என்று சிந்திக்கும் போது எமக்கே ஆச்சரியமாக இருக்கும். இத்தகைய குணத்தை எவரிடமும் காணமுடியாது.

அதனாலோ என்னவோ கிளிநொச்சி பிரதேசத்தில், பள்ளிச் செல்லும் மழலைகள் முதல் முதியோர் வரை அனைவரது மனதிலும் பதிந்துவிட்ட ஓர் அற்புதக் கலைஞராக ஐயா திகழ்ந்தார்.

~ * ~ தமிழொளி கலாமன்றம் ~ * ~

ஆரம்பத்தில் "தமிழொளி கலாமன்றம்" எனும் பெயரில் ஒரு மன்றத்தை நிறுவி, அதன் ஒருங்கிணைப்பாளராக பல்வேறு கலை நிகழ்வுகளை கிளிநொச்சி பிரதேசமெங்கும் பல அரங்குகளில் அரங்கேற்றினார். பின்னர் தமிழீழ கலைப் பண்பாட்டு கழகத்தின் ஒரு கிளை நிறுவனமாக இம்மன்றம் மாற்றம் பெற்றது.

எனவே இந்த வலைத்தளத்திற்கும் "தமிழொளி கலாமன்றம்" என்றே பெயரிட்டுள்ளோம். இது தமிழொளி கலாமன்றத்தில் பங்கேற்ற கலைஞர்களை ஒருங்கிணைக்கும் பெயராகவும் அமையலாம்.

எழுத்துத்துறையில் இவர் எழுதிய ஆக்கங்களோ ஏராளம். இவர் எழுதி இயக்கிய பல நாடகங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல அரங்குகளில் அரங்கேற்றப்பட்டன. இவரது கலை நிகழ்வுகளில் பாடசாலை மாணவ மாணவிகளும் முதல் பல்வேறுமட்டத்தினரும் ஒருங்கிணைந்து பங்கேற்பர்.

தமிழரின் கௌரவமான வாழ்வுக்கு தமிழீழத் தாயகமே ஒரே தீர்வு எனத் திடமாக நம்பியவர்.

தமிழீழப் போராட்டத்தில், போராளிகளுடனும் மிகுந்த பற்றும் நெருக்கமும் உடையவர். போராளிகளின் அன்புக்கு பாத்திரமானவர்.

புலிகளின் குரல் வானொலியில் பங்காற்றும்  பலரை தெரிவு செய்தவரும் அதன் தொடர் ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

இவரால் இயற்றப்பட்ட பாடல்களை புலிகளின் குரல் வானோசையில் கேட்கலாம்.

ஈழநாதம், விடுதலை மற்றும் பிற செய்தித்தாள்களிலும் இவரது ஆக்கங்களை காணலாம்.

இவரது மறைவையொட்டி புலிகளின் முக்கியத்தர்களும், தமிழீழ கலைப் பண்பாட்டுக் கழக உறுப்பினர்களும், கிளிநொச்சி மாவட்ட கல்வித் திணைக்களத்தினரும்,  ஊரவர்களும் பெருந்திரளாக திரண்டு தமது இரங்கல்களை தெரிவித்துக்கொண்டதுடன் ச. சத்திவேல் ஐயாவின் கலைப்பணி நிறைவு பெறுகிறது. தமிழ் தமிழீழம் என வாழ்ந்த ஐயா அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். ஆனாலும் அவர் என்றும் எங்கள் மனங்களில் இருப்பார்.

இவரது மறைவு நாளில் இவரது பாடல்களை புலிகளின் குரல் வானோசை தொடர்ந்து ஒலிபரப்பி தனது இரங்கல்களை தெரிவித்துக்கொண்டது.

"ஒரு சிறந்த படைப்பாளி காலத்தால் அழிவதில்லை."

தமிழொளி கலாமன்றத்தின் முன்னாள் கலைஞர்களான நாங்கள் இந்த வலைத்தளத்தில் அன்னாரின் படைப்புகளை தொகுத்து காப்பதற்கான ஒரு முயற்சியில் இறங்கியுள்ளோம். இனிவரும் நாட்களில் அவரது படைப்புகளை இந்த தளத்தில் காணலாம்.

நன்றியுடன்

தமிழொளி கலாமன்றம்
தமிழொளி கலாமன்றக் கலைஞர்கள்

No comments: